புலிகளின் தலைவர் உயிரோடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,,!!!

புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள்

புலிகளின் ஊடகத் துறை – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. ‘இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்’ எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஜுனியர் விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள முகப்பு செய்தியில் தெரிவித்துள்ளது.

இச் செய்தி முன்னர் பிரசுரமாகி இருந்தாலும் தற்போது முகநுாலில் இந்தச் செய்தி மீண்டும் தீயாக பரவுகிறது….

இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர், ”அது புலிகளின் இணைய தளமேதான். இது நாள் வரை தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து புலிகள் தரப்புகருத்து சொல்லவே இல்லை.

கே.பி-யை வளைத்த உளவு அமைப்புகள்தான் புலிகளின் கருத்தாக ஏதேதோ பரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இனி புலிகளின் அனைத்து அறிவிப்புகளும் இந்த இணையதளத்தில்தான் இடம்பெறப் போகின்றன!” என்று அடித்துச் சொல்கிறார்கள்.”இந்த புதிய இணைய தளத்தின் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ச.தமிழ்மாறனைப் பற்றி புலிகளின் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.

ச.தமிழ்மாறன் என்பது அவருடைய இயற்பெயர் அல்ல. சிங்கள அரசின் சதி வலையில் சிக்கி விடாதபடி இருப்பதற்காகவே புலிகளின் தலைமையக உத்தரவுப்படி ச.தமிழ்மாறன் என்ற பெயரில் அவர் இயங்கத் தொடங்கி இருக்கிறார். 45 வயதான அவர் அந்த இணைய தளத்தின் வாயிலாகவே விரைவில் தன் முகத்தைக் காட்டவிருக்கிறார். அப்போது புலிகளின் சர்வதேசத் தொடர்பு கள் அனைத்தும் ஊடகத் துறையின் இணையதளம் ஊடாக இணையும்.

இதோடு விரைவிலேயே புலிகளின் மாவீரர் பணிமனை, மக்கள் தொடர்பகம் உள்ளிட்டவையும் இயங்கத் தொடங்கும். மாவீரர் பணிமனையில் ஈழப் போரில் உயிர்விட்ட தளபதிகள், தியாகப் போராளிகளின் பெயர்ப் பட்டியல் விரைவிலேயே வெளியிடப்படும். மக்கள் தொடர்பகம் மூலமாக சர்வதேச தமிழ் தொடர்புகள் மேம்படுத்தப்படும். ஏற்கெனவே இயங்கி வந்த தமிழீழ மாணவர் அமைப்பு மறுபடியும் தொடங்கப் படவிருக்கிறது…” எனச் சொன்னார்கள், புலிகளின் தொடர்பில் இன்றைக்கும் இருக்கும் அந்த நண்பர்கள்.

அவர்களின் துணையுடனேயே நாம் ‘ச.தமிழ்மாற’னிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

”புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறீர்கள். ஆனால், சிங்கள ராணுவம் அவர் கொல்லப்பட்டு விட்டதாக இந்தியாவுக்கு சான்றிதழே கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே…?”

”தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார். பல தடவை இப்படியான நாடகத்தை இலங்கை அரசு நடத்தியதும், அதன் பின்னர் அதன் முகத்திரை கிழிவதும் வழக்கமான ஒன்றுதான். இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இறப்புச் சான்றிதழ் என்பதும் ஒரு திட்டமிட்ட நாடகமே!”

”கடைசிக் கட்டப் போரில் இருந்து பிரபாகரன் எப்படித் தப்பினார்?”

”இலங்கை அரசுடனான இறுதிக்கட்டப் போரில் தேசியத் தலைவர் நேரடிச் சமரில் ஈடுபட்டார். இலங்கை அரசின் கடும் சுற்றி வளைப்பில் நாம் போர் யுக்தியினையும் தந்திரோ பாயத்தையும் பயன்படுத்தி தலைவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம். இதில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கரும்புலிகள் வீரச் சாவைத் தழுவிக் கொண்டனர். முக்கியத் தளபதிகள் சகிதம் தலைவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பயன்படுத்திய தந்திரோபாயத்தையும் போர் யுக்தியையும் இன்றைய சூழலில் சொல்வது சிறப்பாக இருக்காது.”

”அப்படியென்றால் சிங்கள ராணுவம் பிரபாகரனின் உடலாகக் காட்டியது எது?”

”சிதைக்கப்பட்ட தலைவரை ஒத்த அந்த உருவம் பற்றி ராஜபக்ஷே அல்லது சரத் ஃபொன்சேகாவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால், அந்த அதீத மருத்துவ தொழில் நுட்பம் பற்றி அவர்களுக்குத்தானே தெரியும்.”

”வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால்தான் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் கருத்து சிலரால் விமர்சிக்கப்படுகிறது. உரிய ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாமே?”

”தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் இன்றைய சூழலில் அவற்றை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது. சாலச் சிறந்த ஆதாரமாக வெகு விரைவிலேயே தேசியத் தலைவர் உலகத் தமிழர்கள் முன் தோன்றுவார்!”

”அவருடைய கருத்தாக ஏதும் வெளிவருமா? இல்லை… அவரே நேரடியாக வெளியே வந்து பேசுவாரா?”

”மாவீரர் தினம் மற்றும் சிறப்பு நேர்காணல்களில் தேசியத் தலைவர் எப்படித் தோன்றுவாரோ… அப்படியேதான் தோன்றுவார்!”

”ஈழப் போரில் கடைசிக் கட்ட நிலைமைகள் எப்படி இருந்தன? இறுதியில் ஆயுதங்களை மௌனிக்க வேண்டிய நிலைக்கு புலிகள் எப்படித் தள்ளப்பட்டார்கள்?”

”ஒரே நாளில் 25 ஆயிரம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதே இலங்கை அரசு போரை எவ்வளவு கொடூரமாக நடத்தியது என்பதற்கு சாட்சி. எமது மக்களை இலங்கை ராணுவம் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் பதில் தாக்குதலை தவிர்த்து, தலைவரின் உத்தரவின் கீழ் நாம் மௌனமானோம்.”

”புலிகளுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டு இன்றைய நிலையில் பல்வேறு இணைய தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள்தான் அதிகாரபூர்வ இணையதளம் என்பதை எப்படி நம்புவது?”

”குழப்புகின்ற இணைய தளங்களும், குழப்புகின்றவர்களும் இருக்கிறார்கள் என்பது எமக்கும் தெரியும். இவற்றை எல்லாம் தாண்டி எமது தலைவரின் வழிகாட்டுதலுடன் இயங்கும் விடுதலைப் புலிகளை எமது மக்கள் சரியாக இனம்கண்டு கொள்வார்கள். எது நிஜம் என்பது அவர்களுக்குத் தெரியும்!”

”புலிகளின் உளவுத் துறை தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக சொல்லப்படுவது குறித்து..?”

”தேசியத் தலைவர் பாதுகாப்பாக உள்ளார் என்ற பதிலே இதற்கும் பொருந்தும்!”

”பிரபாகரனின் குடும்பத்தினர் முற்றாக அழிக்கப் பட்டு விட்டதாகச் சொல்லும் சிங்களத் தரப்பு, அதற்கு ஆதாரமாக பாலச்சந்திரன், துவாரகா போன்றோரை ஒத்த படங்களை வெளியிட்டி ருக்கிறதே?”

”தேசியத் தலைவரின் மகன் சார்ல்ஸ் ஆண்டனி களத்தில் வீரச்சாவு அடைந்தது உண்மை. தலைவரின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பாதுகாப் பாகவே உள்ளனர்.”

”புலிகள் அடுத்த கட்டமாக எத்தகைய போராட்டத்தைக் கையிலெடுக்கப் போகிறார்கள்?”

”இது மக்கள் விடு தலைப் போராட்டம். எமது மக்கள் நலன் கருதித்தான் எங்க ளின் ஆயுதங்கள் மௌனமாகின. அமைதி வழியை விரும்பிய எம்மை சிங்கள அரசு தொடர்ந்து ஏமாற்றியே வந்தது. மீண்டும் எமது மக்களுக்கு சரியான தீர்வுத் திட்டத்தை சிங்கள அரசு முன்வைக்கா விட்டால், மக்கள் எழுச்சியுடன் எமது ஆயுதப் போராட்டம் தொடரும்!”

”கடைசிகட்டப் போரில் சர்வதேச சமாதானப் புள்ளிகளை நம்பி புலிகள் ஏமாந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே… அது உண்மையா?”

”சர்வதேச உளவு வலையில் எமது சில முக்கிய உறுப்பினர்கள் வீழ்ந்தது உண்மைதான். அதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டதும் உண்மைதான். எமது போராட்ட வரலாற்றில் துரோகம் என்பது காலம் காலமாகவே நடந்துவரும் ஒன்றுதான். இவற்றையெல்லாம் தாண்டி எமது தேசியத் தலைவர் எமது போராட்டத்தை தொடர்ந்து வழி நடத்துகிறார்.”

”இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென புலிகள் விரும்புகிறார்கள்?”

”தேர்தல் குறித்து நாம் கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை. சிங்களப் பேரினவாதம் பற்றி எமது மக்கள் தெளிவுடனேயே உள்ளார்கள்.”

”போரில் உண்டான தோல்வி, பிரபாகரனை எந்தளவுக்கு வருத்தி இருக்கிறது?”

”மக்களின் இழப்பும் போராளிகளின் இழப்பும் தேசியத் தலைவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தி யது. எமது மக்களின் கொடூர மரணங்கள் தலைவரின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி எமது மக்கள் சுதந்திர தமிழீழத்தில் வாழ வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாகவே இருக்கிறார்.”

”தந்தை வேலுப்பிள்ளையின் மறைவின்போது பிரபாகரனின் மனநிலை எப்படி இருந்தது?”

”உறவுகளுக்கு அப்பாற்பட்டு எமது மக்களை நேசிப்பவர், எமது தேசியத் தலைவர் பிரபாகரன். இதுவே உங்களின் கேள்விக்கான பதில்!”

ஏன் இந்த இணைய அறிவிப்பு?

இலங்கைஅதிபர் தேர்தலில் ஃபொன்சேகா வுக்கே அதிக வெற்றி வாய்ப்பு தெரிவதாக உலகெங்கிலும் உள்ள கணிப்பாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பார்த்து ராஜபக்ஷே புதியதொரு சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்! போரின் வெற்றிதான் பிரதான பிரசாரப் பொருளாக இருப்பதால், போரின் அச்சத்தை மீண்டும் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்க நினைக்கிறாராம் அவர்.

இதற்கென்றே சில சிங்களப் பகுதிகளைக் குறிவைத்து புலிகளின் பெயரால் தாக்குதல்களை அரங்கேற்ற ராஜபக்ஷே சகோதரர்கள் திட்டமிடுவதாக ஒரு செய்தி பரவியுள்ளது. முகாம்களில் தடுப்புச் சிறைகளில் வைக்கப்பட்டிருக்கும் புலிப் போராளிகள் மற்றும் சில தளபதிகளை கருணாவின் உதவியுடன் தங்கள் திட்டத்துக்கு சாதகமாகத் திருப்பவும் திட்டமாம்.

இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் முகாம்களுக்கு வந்த கருணா, கிட்டத்தட்ட ஆயிரம் போராளிகளை முகாம்களிலிருந்து விடுவித்து தனியே அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தற்போது வெளியே விடப்பட்டிருக்கும் தளபதி ஒருவர் இந்தப் போராளிகளை வழிநடத்துவாராம். இவர்கள் பல அணிகளாகப் பிரிக்கப்பட்டு சிங்களப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப் பணிக்கப்பட்டிருக்கிறார்களாம். அதே வேளையில் இவர்களின் தாக்குதல்களினால் மக்களுக்கு உயிர்சேதம் ஏற்படாமல், பீதி மட்டும் ஏற்படும் வகையில் நாடகம் அரங்கேறுமாம்.

இதையெல்லாம் கருத்தில்கொண்டு இப்போதே சிங்கள ராணுவத்தின் பல்வேறு படையணிகளும் ஆங்காங்கே தயாராக உலவி வருகின்றன. ‘புலிகள் மீது எதிர் தாக்குதல். மிச்சம் மீதி இருந்த புலிகளை யும் ராணுவம் அழித்தது’ என்று செய்திகள் வெளியிடத் திட்டமாம்.

புலிகளுடனான போரில் முக்கியப் பங்கு வகித்த ராணுவத் தின் அவசரத் தாக்குதல் படையணி-1 மற்றும் 2 தற்போது அம்பிலிப்பிட்டி நகரிலுள்ள ஒரு தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அதிசக்தி வாய்ந்த குண்டுகளை வீசி, இலக்கை நோக்கி தாக்குதல் நடத்தக்கூடிய இந்தப் படையணி சம்பந்தமில்லாமல் இந்தப் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ள காரணம் தெரியாமல், சிங்கள மக்களே குழம்பித்தான் வருகின் றனர்.

ஃபொன்சேகாவோ இதை எப்படியோ மோப்பம் பிடித்து, தனது தேர்தல் பிரசாரத்தினூடே இந்த சதித்திட்டத்தைப் பற்றி விளக்கிப் பேசியிருக்கிறார்!

சிங்கள மக்களுக்கு போர் பயத்தை ஏற்படுத்தி, அப்பாவி மக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாக அந்த இயக்கத்துக் கும் அவப் பெயர் ஏற்படுத்தி ஒரே கல்லில் ரெண்டு மாங் காய் அடிக்க அதிபர் தரப்பு முனைவது குறித்து நிஜமான புலிகளுக்கு தெரியவந்ததன் விளைவுதான், ‘பிரபாகரன் பத்திரமாக உள்ளார்’ என்று இணையதளம் மூலம் அவர்கள் சீறிக் கிளம்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் முதல் செயல்படாமல் இருந்த புலிகளின் மாவீரர் பணிமனை, ஆவணக்காப்பகம், தொடர் பகம் ஆகியவையும்இனி செயல்படத் தொடங்கும் என்றும் இந்த இணைய தளத் தில் அறிவித்திருக்கிறார்கள். இந்த அலுவலகங்கள் எங்கு செயல்படும், எப்படி செயல்படும் என்பது சம்பந்தப்பட்ட போராளிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் தெரியும். ராணுவத் துக்கு எதிராக மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடங்குவதற் கான புலிகளின் ஆரம்பகட்ட ஒன்றுகூடலுக்கான அழைப்பு தான் இது என்கிறார்கள்.

இன்னொரு பக்கம், இலங்கை அரசு மிரட்டலின் மூலமாக புலிகளின் நிதிப் பொறுப்பாளர்களை வளைத்து வருகிறது. அவர்களிடமிருக்கும் பெருமளவிலான பணத்தையும் மொத்தமாகக் கைப்பற்றி வருகிறது. கடந்த வாரம் கூட இதற்காக லண்டன் சென்ற ராஜபக்ஷேவின் புதல் வன் இளைஞர்களின் எதிர்காலம் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷே, அங்குள்ள புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை சந்தித்திருக்கிறார். பிறகு அயர்லாந்து, கனடா, அமெரிக்காவைச் சேர்ந்த புலிகளின் நிதிப் பொறுப்பாளர்களையும் சந்தித்திருக்கிறார்.

தற்போது பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதோடு, இயக்கமும் செயல்படப் போகிறது என்பதை வெளிப்படையாக அறிவித்தால்தான் இந்த நிதி கொட்டும் முகவர்கள் எவருக்கும் பயப்படாமல் இயக்கத்தின் பக்கம் நிற்பார்கள் என்ற நோக் கமும்கூட இந்த இணையதள அறிவிப்புக்குப் பின்னால் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
Share on Google Plus

About சாணக்கியன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment