யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும், மாணவர் விடுதிகளிலும் தமிழீழ விடுதலை புலிகளின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பதற்றமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் யூலை ஐந்தாம் திகதி அனுஷ்டிக்கப்பட்டுவந்த கரும்புலிகள் தினத்தை முன்னிட்டே இந்த சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருக்கின்றன.
தமிழீழ மக்கள் படை என்ற அமைப்பின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் இன்று யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதி, விரிவுரை மண்டபங்கள், பரீட்சை மண்டபங்கள், மலசலகூடங்கள் உட்பட பல்கலைக்கழகத்தின் பல இடங்களில் யூலை ஐந்தாம் திகதியான நேற்றய தினம் காலை முதல் ஒட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய கரும்புலிகளை நினைவுகூறும் நாளைில் தமது கவனத்தை திசை திருப்பும் நோக்கில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கலாம் என பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘தமிழீழ மக்களுக்கு வணக்கம்’ என்று ஆரம்பிக்கும் இந்த சுவரொட்டியில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் மற்றும் தமிழினப் படுகொலை தொடர்பிலும் பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை கரும்புலிகள் தினம் குறித்தும் இதில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இவை மாத்திரமன்றி யாழ். குடாநாடு உட்பட தமிழர் பிரதேசங்களில் தீவிரமடைந்துள்ள கலாசார சீரழிவுகளையும் கோடிட்டுக் காட்டியுள்ள சுவரொட்டி, இவை சிங்கள பேரினவாத அரசினதும், அதன் இராணுவக் கட்டமைப்பினதும் சூழ்ச்சிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலாசார சீரழிவுகளுக்கு இனிமேலும் அனுமதிக்கப் போவதில்லை என்று எச்சரித்துள்ள தமிழீழ மக்கள் படை என்ற இயக்கம், இந்த சதிச் செயல்களுக்கு தமிழர்கள் துணை போகக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனையும் மீறி இத்தகைய துரோகச் செயல்களுக்கு துணைபோனால் கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்றும் அந்த சுவடிரொட்டியில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment