மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு மாவட்ட செயலகம் இன்றையதினம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி மாவட்டத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் துரதிஷ்டவசமாக இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 28 நபர்கள் மரணமடைந்துள்ளனர்.
அதேவேளை, 77 நபர்கள் காயமடைந்துள்ளனர், தொடர்ந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 12 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருவது கவனத்திற் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இயங்குகின்ற அனர்த்த முகாமைத்துவப் பிரிவினூடாக மாவட்ட செயலகம், மாநகர சபை, போதனா வைத்தியசாலை மற்றும் பொலிஸ் முப்படைகள் ஆகிய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதனூடாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையற்ற பொருட்கள் வழங்குவதை தடுக்கவும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை தடுக்கவும் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதை உறுதி செய்யவும் முடியும் என்பதையும் தங்களுக்கு அறியத்தருகின்றேன்.
எனவே தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது அமைப்புக்களின் ஊடாகவோ இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு பொருட்களை வழங்குவதையும் அசௌகரியங்களுக்கு உட்படுத்துவதையும் தவிர்த்து கொள்வதோடு, தேவை ஏற்படின் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தங்களது நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு, மா. உதயகுமார், அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர். தொ.இல - 065 2227701, 077 3957885
0 comments:
Post a Comment