கிளிநொச்சி பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தோண்டி எடுக்கப்பட்டதாக தெரிவித்து, தங்க முலாம் பூசப்பட்ட போலியான 92 தங்கச் சங்கிலிகளை வர்த்தகரொருவருக்கு சுமார் 7 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்த சந்தேக நபர்கள் மூவரை அநுராதபுரம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தங்கமுலாம் பூசப்பட்ட 92 போலி தங்கச்சங்கிலிகள் அடங்கிய பானை ஒன்றினை மரதன்கடவல பொசன்புர பிரதேசத்திலுள்ள வர்த்தகரொருவருக்கு விற்பனை செய்து 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவினை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த 92 சங்கிலிகளின் தற்போதைய சந்தைப் பெறுமதி 45 இலட்சம் என குறித்த வர்த்தகரிடம் தெரிவித்து குறித்த தொகைக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் மேற்படி வர்த்தகரை இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்த வேளையில், கிளிநொச்சி பிரதேசத்தில் கட்டடமொன்று கட்டுவதற்காக பெகே இயந்திரத்தினால் குழியொன்று தோன்றி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தமக்கு இத்தகைய தங்கச் சங்கிலிகள் அடங்கிய முட்டியொன்று கிடைத்ததாகவும், இவை போர் இடம்பெற்ற வேளையில் புதைத்து வைக்கபட்டவை எனவும் தெரிவித்து அவ் வர்த்தகருடன் கொடுக்கல் வாங்கல் பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு விருப்பம் தெரிவித்த வர்த்தகரும் அச் சங்கிலிகளை பெற்றுக்கொண்டு பணத்தையும் வழங்கியுள்ளார்.
அதன்பின்னர் குறித்த நகைகளை பரிசோதனை செய்த வேளையில் அவை உலோகங்களினால் ஆக்கப்பட்டு தங்க முலாம்மிடப்பட்டிருந்த போலி தங்க சங்கிலிகள் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவ் வர்த்தகர் போலி சங்கிலிகளுடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்று சந்தேகநபர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பணத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் அநுராதபுர குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment