கிளிநொச்சி பூநகரியில் வாழும் மக்கள் பற்றியும் இந்த கிராமம் பற்றியும் இன்று பாராளுமன்றின் கவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொண்டுசெல்ல உள்ளார்.
குறித்த கிராமம் பற்றி தெரிய வருவதாவது,
கிளிநொச்சி மாவட்ட மக்களின் வறுமை நிலை தொடர்பிலான கள ஆய்வினை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர் கடந்த முதலாம்
திகதி பூநகரி 4ஆம் கட்டையில் அமைந்துள்ள தெளிகரைக் கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி கிராமத்து மக்களது அவல நிலை தொடர்பிலும் மக்களின் வறுமை நிலையைப் பயன்படுத்திக் கடந்த காலங்களில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குப் பொறுப்பாக இருந்த மகிந்த அரசாங்கத்தின் பங்காளிகள் இம்மக்களை ஏமாற்றியமை தொடர்பிலும், அங்கு வாழும் மக்கள் மூலமும் அவர்களது கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிடப்படாத அரைகுறை அபிவிருத்திகள் மூலம் மக்களை ஏமாற்றி மக்களுக்கான பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பிலும் கண்டு உணர முடிந்துள்ளது.
140 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட பூநகரி தெளிகரைக் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.
இக்கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதில் பெரிதும் அவலப்பட வேண்டிய வறுமை நிலையே காணப்படுகின்றது.
வறுமையோடு வாடும் இக்கிராமத்து மக்களைக் கூட ஏமாற்றுக்கொள்ளையர்கள் விட்டுவைக்கவில்லை.
கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இக்கிராமத்திலுள்ள 50 குடும்பங்களுக்கு தலா 5 ½ இலட்சம் ரூபா பெறுமதியான இந்திய வீடுகள் வழங்கப்பட்டது.
அப்போதைய காலத்தில் தமது செல்வாக்கினைப் பயன்படுத்திய கட்டட ஒப்பந்தகாரர்கள் சிலர் அந்த மக்களுக்கான 50 வீடுகளையும் கட்டி வழங்குவதாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
அவர்கள் 5 ½ இலட்சம் ரூபா பெறுமதியான இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டங்களை 3 ½ இலட்சம் ரூபாய்களுக்குள் கட்டி வழங்கியுள்ளதாகவும் பெருமளவான பணத்தை அவர்கள் கொள்ளையடித்துள்ளதாகவும் அங்கு
வாழும் மக்களால் கூறியுள்ளனர்.
இது தவிர தற்போது இங்குள்ள வீடு அற்ற ஏழைக் குடும்பத்திற்கு சஜித் பிரேமதாசாவின் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக ஒரு இலட்சம் ரூபா கடனாக வழங்கிவிட்டு மூன்று இலட்சம் ரூபாவில் வீடமைக்கச் சொல்லி வற்புறுத்தப்பட்டு வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனுர்.
குறித்த பகுதி மக்கள் 39 குடும்பங்கள் யுத்தத்தால் குடும்பத் தலைவனை இழந்த குடும்பங்களாகவும் நாள் ஒன்றுக்கு 100 ரூபா வருமானத்தைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மிகவும் வறியவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.
இப்படியான நிலையிலுள்ள மக்கள் எப்படி கடனாகப் பணம் பெற்று மீதிப் பணத்தைப் போட்டு வீடமைப்பார்கள்?
இங்கு உள்ள 17 மாணவர்கள் காலை உணவு இல்லாத நிலையில் பாடசாலைகளுக்குச் செல்கின்றார்கள்.
மேலும் , பூநகரி தெளிகரைக் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை. மக்கள் தொலைதூரங்களுக்குச் இதனால் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்த மக்களுக்கான குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டி அமைப்பதாகக் கூறி கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளிகளான ஈ.பி.டி.பி அரசியல்வாதிகளால் பெருமளவு பணத்தை ஒதுக்கி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பூரணப்படுத்தப்படாத நிலையில் அரையும் குறையுமாகக் காணப்படுகின்றது.
கிராமத்திலுள்ள விதவைக் குடும்பங்கள், ஏழைக் குடும்பங்கள் பலருக்கு வறியவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமுர்த்தி உதவித்திட்டங்கள் உட்பட அரசினது உதவித்திட்டங்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.
தற்போதுள்ள நல்லாட்சிக்கான அரசாங்கம் தமது கிராமத்து மக்களது வறுமை நிலையைக் கருத்திற்கொண்டு பூநகரி தெளிகரைக் கிராமத்து மக்களது வறுமை நிலை மாற்றி மக்கள் வாழ்வில் ஒளி பிறக்க நல்லாட்சிக்கான மைத்திரி ஆட்சி உதவுமா..? என்ற ஏக்கத்துடன் ஏழை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள் வாழ்வின் விடியழுக்காய்.
0 comments:
Post a Comment