மண்புழு உரத்தின் மகிமையும் அதன் தயாரிப்பு முறையும் !!!

இன்றைய தேதியில் நாம் மிக அதிக பணத்தைச் செலவு செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்குதான். இதுவரை இல்லாத பல நோய்கள் நம்மை தாக்கக் காரணம், செயற்கையான ரசாயன உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை நாம் பெருமளவில் உட்கொள்ள ஆரம்பித்ததுதான். செயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் காய்கறிகளை ஒதுக்கிவிட்டு, இயற்கையான உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு இப்போது மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இயற்கை உரங்களில் பல வகை உண்டு. அதில் ஒன்றுதான் மண் புழு உரம்.
ஒவ்வொருவர் வீட்டிலும் காய்கறிகள், பழங்கள், உணவு போன்ற மக்கும் கழிவுகள் நிறையவே கிடைக்கின்றன. தேவை இல்லாததால் தூக்கி எறியப்படும் இந்த கழிவுகளைக் கொண்டு மண் புழு உரம் தயாரிக்க பயன்படுத்தினால், நல்ல லாபம் பார்க்க முடியும். ‘வெர்மி கம்போஸ்ட்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மண் புழு உரம், நிலத்திற்கு மாசு ஏற்படாமல் தடுப்பதோடு, நம் உடலுக்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத காய்கறிகளை அதிக அளவில் விளைவிக்கவும் உதவுகிறது. மண் புழு உரம் தயாரிக்கும் தொழிலில் அனைவரும் இறங்கி ஜெயிக்க முடியும். ஆனால், அதற்கென இருக்கும் தயாரிப்பு முறையை மட்டும் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.
விவசாயத்திற்கும், தரிசுநில மேம்பாட்டிற்கும் மிகவும் பயன்படக்கூடியது இந்த மண் புழு உரம். வீடுகளில் செடி வளர்ப்பவர்களுக்கும், தோட்டம் அமைத்திருப்பவர் களுக்கும் இந்த மண் புழு உரம் அதிக நன்மை தருபவை. நஞ்சை நிலங்களில் பல விவசாயிகள் மண்புழு உரம் உபயோகிப்பதன் மூலம் தங்களது விளைச்சலை அபரிமிதமாகப் பெருக்கிக் காட்டியுள்ளனர். கோழி வளர்ப்பவர்கள் அதற்குத் தீனியாக மண் புழுக்களைப் போடுகிறார்கள். விலை உயர்ந்த மீன்குஞ்சுகளை வாங்கி வளர்த்தாலும் அதற்கு இரையாக மண் புழுக்களை உணவாகப் போடுகின்றனர்.  மண் புழு உரம் போட்டு பயிரிடப்பட்ட திராட்சைகள் நல்ல தரத்துடனும், அதிகளவில் விளைச்சலும் கொடுத்தது என தெரிய வந்துள்ளது. எனவே, இதுபோன்ற இயற்கை உரத்திற்கு அதிக டிமாண்ட் காணபடுகின்றது .
இந்த பிஸினஸ் ஆரம்பிக்க குறைந்தபட்சம் 500 சதுர அடி இடம் தேவைப்படும். கிராமப்புறங்களில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் தங்களது தோட்டத்திலேயே மண் புழு உரத்தைத் தயாரிக்கலாம். மொட்டை மாடியில், மேல் சுவர் கெடாதபடி பிளாஸ்டிக் ஷீட் போட்டு, அதன் மீது இந்த மண் புழு உரத்தைத் தயாரிக்கலாம்.
மாட்டுச் சாணம், கோழி இறகு, மீன் கழிவுகள், அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற மக்கும் தன்மையுடைய அனைத்துப் பொருட்களையும் மண் புழு உரம் தயாரிப்புக்கு பயன்படுத்தலாம்.மாட்டுச் சாணம், மக்கக்கூடிய இலை தழைகள், சருகுகள் என எல்லாவற்றையும் ஈரப்பதம் கலந்த மண்ணில் போட்டு, மாட்டுச் சாணத்தை கரைத்துத் தெளிக்க வேண்டும். ஒரு மாதத்தில் அந்த மண்ணில் போட்ட அத்தனை பொருட்களும் மக்கிவிடும். இதன் பிறகு மேற்கொண்டு தண்ணீர் ஊற்றாமல் காற்றுப்படுகிற மாதிரி வைக்க வேண்டும். இதில் மண் புழுக்களை விட்டால் 40-50 நாட்களில் மண் புழு உரம் தயாராகிடும். இதன் பிறகு உரங்களைத் தனியாகவும், மண் புழுக்களைத் தனியாகவும் எடுத்து விற்பனை செய்யலாம்.
இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப் படும் விளைபொருட்களை அதிக ஆர்வத்துடன் மக்கள் வாங்குகின்றனர். உடல் நிலையை பேணுவது குறித்த விழிப்புணர்வு அதிகளவில் மக்களிடம் ஏற்பட்டு வருவதால், இயற்கையான உரங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அதிகளவு வரவேற்பு  ஏற்பட்டிருக்கிறது.
இயற்கை விவசாய ஆர்வலர்கள் மண்புழு உரங்களையும், மண்புழுக்களையும் வாங்க ஆவலாக இருந்தும், இத்தயாரிப்பு குறைந்த அளவிலேயே உள்ளது. தோட்டம், காடு இருக்கிற விவசாயிகள் விவசாயம் செய்துகொண்டே சைடு பிஸினஸாக இந்த தொழிலை செய்தால் மகத்தான வருமானம் பார்க்கலாம். தவிர, குறைந்தளவு முதலீட்டில் புதிதாக பிஸினஸ் செய்ய நினைப்பவர்களும் இத்தொழிலில் இறங்கலாம்.
Share on Google Plus

About சாணக்கியன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment