‘உதயன்’ மீதான வழக்கில், அறிவித்தல் ஏதுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. இதன் காரணமாக வழக்குச் செலவைப் பெற்றுத் தருமாறு உதயன் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றில் கோரியுள்ளார். ஆனால், அவர் சுகவீனம் காரணமாகவே, நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என்று டக்ளஸ் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்ததால், அடுத்த தவணை மருத்துவ அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா, உதயன் பத்திரிகைக்கு எதிராக, அவமதிப்பு வழக்கு ஒன்றை யாழ்.மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கு விசாரணையில் உள்ளது. நேற்றுமுன்தினம் குறித்த வழக்கு மாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. குறித்த தினத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. அவர் அவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகமாட்டார் என்பது பற்றி அவர் முன்னறிவித்தல் விடுக்கவில்லை என்று மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்த உதயன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுமந்திரன், அதற்கான வழக்குச் செலவைப் பெற்றுத் தருமாறும் நீதிமன்றிடம் கோரினார்.
அதற்குப் பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சுகவீனம் காரணமாகவே டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றுக்குச் சமுகமளிக்கவில்லை என்று தெரிவித்தார். அவ்வாறு அவர் சுகவீனமுற்றிருக்கிறார் என்றால், அவர் சுகவீனமாக இருந்தமைக்கான மருத்துவ அறிக்கையை அடுத்த தவணை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment