ஐ.டி துறையில் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த இருவர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதில் தமிழரான ஷிவ் நாடார் சர்வதேச அளவில் 17வது இடத்தை பெற்றிருக்கிறார்.
இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 7,800 கோடி டாலர்கள் சொத்துக்களுடன் முதலிடத்தை பெற்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் 6,620 கோடி டாலர்கள் சொத்து மதிப்புடன் 2வது இடத்தை பிடிக்கிறார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் இவரது சொத்து மதிப்பு 1800 கோடி டாலர்கள் உயர்ந்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் இந்த பட்டியலில் 3வது இடத்தை பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 5,400 கோடி டாலர்கள் ஆரக்கிள் நிறுவனத் தலைவர் லாரி எல்லிசன் 5,100 கோடி டாலர்கள் சொத்து மதிப்புடன் 4வது இடத்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு லாரி எல்லிசன் 2வது இடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொறுத்தவரை ஐ.டி துறை ஜாம்பவான்கள் இருவர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். விப்ரோ நிறுவனர்களில் ஒருவரான அசீம் பிரேம்ஜி 1,600 கோடி டாலர்கள் சொத்து மதிப்புடன் 13வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய அளவில் அசீம் பிரேம்ஜிக்கு 3வது இடம்.
தமிழகத்தை சேர்ந்தவரும் ஹெச்.சி.எல் குழுமத் தலைவருமான ஷிவ் நாடார் 1,160 கோடி டாலர்கள் சொத்து மதிப்புடன் பட்டியலில் 17வது இடத்தில் வருகிறார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே தமிழர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் ஷிவ் நாடாருக்கு 7வது இடம்.
இந்த பட்டியலில் முதல் 10 இடத்தை அமெரிக்கர்கள் பிடித்துள்ளனர். அதுமட்டுமல்ல, பட்டியலில் இடம் பெற்றுள்ள, 100 பேரில் 52 பேர் அமெரிக்கர்கள்தான். இதில் 31 பேர் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். 19 சீனர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 132 .7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். பட்டியலில் 12 பேர் புதுமுகங்கள்.
பட்டியலில் இடம் பெற்றவர்களில் 5 பேர் பெண் சி.இ.ஓக்கள். முதலிடத்தில் ஹாங்காங்கைச் சேர்ந்த லென்ஸ் டெக்னாலஜி குழுமத்தின் தலைவர் சூவோ குயின்ஃபே உள்ளார். 100 கோடீஸ்வரர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 89,200 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும்.
100 பேர் பட்டியலில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தொழிலதிபரான சிம்பொனி டெக்னாலஜித் தலைவர் ரொமேஷ் வாத்வானி அவரது மனைவி நீரஜாவும் இடம் பிடித்துள்ளனர்.
0 comments:
Post a Comment