எனது கணவர் கடத்தப்பட்ட கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாய ராஜபக்சவே இருந்தார். அக்கால கட்டத்தில் கொழும்பு அதியுயர் பாதுகாப்புக்கு உட்பட்டிருந்தது. எனவே எனது கணவரை கடத்தியவர் கோத்தபாய ராஜபக்சவின் ஆக்கள் தான், அங்கு விடுதலைப்புலிகளா வந்து கடத்தினர்கள். எனவே இதற்கான தீர்வினை அரசுதான் வழங்க வேண்டும். மரண சான்றிதழ்களோ அல்லது நஷ்டஈடோ எனக்கு தேவையில்லை என காணாமல் செய்யப்பட்ட புதுக்குடியிருப்பை சேர்ந்த சந்திரலிங்கம் என்பவரின் மனைவி லலிதா தெரிவித்தார்.
நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கான செயலணியின் அமர்வு இன்று மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அணியின் செயலாளர் அ.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இறப்பு சான்றிதழினை நான் ஒருபோதும் எற்றுக் கொள்ளமாட்டேன். அவர்கள் இறந்துள்ளார்கள் ஆயின் அவர்கள் என்ன குற்றம் செய்துள்ளனர் என்பதனை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். எந்தவித நஷ்டஈடுகளையும் நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனக்கு தேவை பறிக்கப்பட்ட உயிர்தான். இதனை விட நான் வேறு ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய பிள்ளைக்கு அப்பா என்று சொல்வதற்கு எனது கணவரை மீட்டுத்தாருங்கள்.
2008.26.20 திகதி எனது கணவர் கொழும்பில் வைத்தே வெள்ளை வேனில் கடத்தப்பட்டார். அந்த நேரத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் கோத்தபாய ராஜபக்சவே. அப்போது அதியுயர் பாதுகாப்பு வலயமாக கொழும்பு காணப்பட்டது. இக் காலகட்டத்திலையே தான் எனது கணவர் கடத்தப்பட்டிருந்தார். இவ்வாறான பாதுகாப்பு சூழ்நிலையில் விடுதலைப்புலிகளா? வந்து கடத்தினார்கள்.
எனவே அரசாங்கம் தான் எனது கணவரை கடத்தியது. எனது கணவர் என்ன குற்றம் செய்தார். அதனை வெளிக் கொண்டு வாருங்கள். அவர் எந்த விதமான குற்ற செயலிலும் ஈடுபட்டவர் அல்ல. மாறாக காப்புறுதி நிறுவனம் ஒன்றிலேயே கடமையாற்றி வந்தார். எனவே எனது கணவர் எவ்வாறு எதற்காக காணாமல் ஆக்கப்பட்டார் என்பதனை அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும். எனது கணவர் அநியாயமாக கொல்லப்பட்டிருந்தால் அதனை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே நஷ்டஈட்டையோ அல்லது மரண சான்றிதழையே நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டு.களுவாஞ்சிகுடியில் நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு, மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மற்றுமொரு அமர்வு இன்று மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அவ்வணியின் செயலாளர் அ.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம பொது அமைப்புக்களின் அங்கத்தவர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், யுத்ததினால் பாதிக்கப்பட்டவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்க வேண்டும், காணாமல் போனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்படுவது தீர்வாக அமையாது, முன்னாள் போராளிகளுக்கு அரச தொழில்வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் போன்ற பல விடயங்களை அக்குழுவிடம் மக்கள் முன் வைத்திருந்தனர்.
0 comments:
Post a Comment