வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாற்றம் ஏற்படாமையினால் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நோர்வே பிரதமருக்கும், எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
தமிழ் மக்களின் உடனடிப்பிரச்சினைகளான, மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இன்னும் துரிதமாக இடம்பெற வேண்டும்.
அத்துடன், இந்த செயற்பாடுகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் துரித கதியிலும், சரியான திசையிலும் செல்வதாக அவர் நோர்வே பிரதமரிடன் எடுத்து கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த நோர்வே பிரதமர், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளில் நோர்வேயின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என கூறியுள்ளார்.
சம்பந்தனைச் சந்தித்தார் நோர்வே பிரதமர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே பிரதமர் எர்ணா சொல்பேர்க் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கொழும்பில் இன்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகள், புனர்வாழ்வு, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்தப் பேச்சுத் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், நோர்வே பிரதமர் இன்று காலை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment