வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான ரஸல் உலகக்கோப்பை தொடரை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரஸல்
வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த ரஸல் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ரஸலின் அதிரடி கொல்கத்தாவுக்கு பெரும் ப்ளஸாக உள்ளது. 2017-ம் ஆண்டு ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ரஸலுக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. தடை, காயங்கள் போன்ற காரணங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அவரால் விளையாட முடியவில்லை. தடைக்காலம் முடிந்த பின்னர் காயம் காரணமாக அவரால் அணியில் இணைய முடியவில்லை. இந்த நிலையில் தான் தற்போது ஐபிஎல் கிரிக்கெடில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். தனது அதிரடி சிக்ஸர்கள் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் ரஸல். இந்தநிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியிட்ட உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலில் ரஸல் இடம்பிடித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரஸல்
இதுகுறித்து பேசியுள்ள ரஸல், “ உலகக்கோப்பை தொடருக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டது எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கவில்லை. நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். அதன் காரணமாக தேர்வாளர்களும், பயிற்சியாளரும் என்னைத் தேர்வு செய்துள்ளனர். நான் இங்குச் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இணையலாம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் என்னால் முடிந்த வரை சிறப்பாக செயல்பட்டேன். அணியில் இணைவதை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். கடந்த முறை அழைக்கப்பட்டபோது துரதிர்ஷ்டவசமாக காயமடைந்தது. மூட்டில் ஏற்பட்ட காயத்திற்காக ஊசிகள் போட வேண்டியிருந்தது. அது ஏமாற்றத்தைக் கொடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை காண மட்டுமே முடிந்தது. அதில் என் பங்களிப்பு என்பது எதும் இல்லாமல் இருந்தது.இங்கு தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறேனோ அதனையே வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் செய்யக் காத்திருக்கிறேன். சிக்ஸர்களும், சென்சூரிகளும் அடிக்க காத்திருக்கிறேன்"என்றார்.
வெஸ்ட் இண்டீஸ்
2015 பிறகு ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் தான் ரஸல் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் வங்கதேசம் அணிக்கு எதிராகக் கடந்தாண்டு ஜூலை மாதம் நடந்த போட்டியில் விளையாடியுள்ளார். அதில் 12 பந்துகளை சந்தித்த ரஸல் 13 ரன்களை எடுத்தார். உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்து, வங்கதேசம் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இது உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக நடக்கவுள்ளது. இந்தத்தொடரில் ரஸல் விளையாடவில்லை. அவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் நேரடியாக உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவார் எனத் தெரிகிறது.
0 comments:
Post a Comment