இலங்கை மக்களுக்கு மைத்திரி அளித்துள்ள வாக்குறுதி!


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை கையாள்வதற்காக வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டிற்குள் அழைக்கப் போவதில்லை என வாக்குறுதி அளித்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழித்து நாட்டில் அமைதியையும், சுதந்திர நடமாட்டத்தையும் உறுதிப்படுத்தும் பொறுப்பினை அரச தலைவர் என்ற வகையில் தாம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

சர்வமதத் தலைவர்களுடன் அவசரக் கலந்துரையாடலொன்றை சிறிலங்கா ஜனாதிபதி நேற்று முன்தினம் மாலை நடத்தியிருந்தார், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ இந்த சம்பவங்களை அடுத்து உலகின் பலம்வாய்ந்த நாடுகள் அனைத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகளை சிறிலங்காவில் இருந்து முழுமையாக ஒழிக்க உதவ முன்வந்துள்ளன. ஏற்கனவே முக்கிய நாடுகளில் இருந்து பாதுகாப்பு தொடர்பான நிபுணர்கள் வந்து எமது பாதுகாப்பு படையினருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எந்தவொரு நிலையிலும் வெளிநாடுகளில் இருந்து இராணுவங்களை அழைக்க மாட்டோம். இந்த பிரச்சனையின் போது பாதுகாப்பு படையணிகளையோ, படைக் குழுக்களையோ அழைக்கப்போவதும் இல்லை. எமது படையினர் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது. மிகவும் பாரதூரமான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த எமது படையினர் மற்றும் பொலிசாருக்கு இந்த அமைப்பை இல்லாதொழிப்பது பாரிய விவகாரமாக இருக்காது. அதனால் இந்த நடவடிக்கைகளை மிகவும் வலுவாக முன்னெடுக்க நாம் திட்டமிட்டுள்ளோம்”.

இதேவேளை இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சிங்கள பௌத்த மக்களின் உயர் தலைமை பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திபுல்கும்புரே விமலதம்ம தேரர், சிறிலங்காவின் சம்பிரதாயத்திற்கு தொடர்பே இல்லாத முழுமையாக முகத்தை மூடி இஸ்லாமிய பெண்களின் ஆடை முறைக்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

“நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லீம் என பிரித்து கல்வி கற்பிக்கும் பாடசாலைகள் தடைசெய்யப்பட வேண்டும். ஒன்றாக வைத்து கற்பிப்பதன் ஊடாக ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும். பிரித்து வைத்திருப்பதாலேயே பிளவுகள் ஏற்படுகின்றன. எமக்குத் தெரியும் முன்னைய காலங்களில் இப்படியான செயற்பாடுகள் இடம்பெறவில்லை. அனைவரும் இணைந்தே கல்வி கற்றனர். நான் தற்போது முன்வைக்கும் இந்தக் கருத்தை முஸ்லீம் தலைவர்கள் அவர்களுக்கு எதிரான விடையமாக கருத வேண்டாம். 

முஸ்லிம் பெண்கள் தமது முகம் உட்பட ஒட்டுமொத்த உடம்பையும் மறைத்து அணியும் ஆடைகளை கைவிட வேண்டும். சிறிலங்காவின் கலாசரத்திற்கு வாஹாத்வாதிகள் புதிதாக கொண்டுவந்த இந்த ஆடைகளை இல்லாதொழிக்க வேண்டும். உடம்பை மாத்திரமன்றி ஒட்டுடொத்த முத்தையும் முழுமையாக மறைத்து அணியும் இந்த ஆடை சிறிலங்காவில் இதற்கு 15, இருபது வருடங்களுக்கு முன்னர் அணிந்திருக்கவில்லை. இந்த ஆடையை அணிந்திருந்தால் அந்த நபர் கள்ளனா?, படுகொலையாளியா?, போதைப் பொருள் கடத்தல்காரனா? என்பதை கண்டுபிடிக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.
Share on Google Plus

About Nelli kuddy

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment