மாயமான பட அதிபர் மதன், படங்கள் வினியோகித்து பல கோடிகள் நஷ்டம் அடைந்தார். அவரை கண்டு பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மதன் மாயம்
பட அதிபர் மதன் வாரணாசி கங்கையில் மூழ்கி சமாதி ஆகப்போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த 27-ந்தேதி மாயமானார். அவர் கதி என்ன ஆனது? என்று இதுவரை தெரியவில்லை. போலீசார் தனிப்படை அமைத்து தேடுகின்றனர். தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா தலைமையில் திரைப்படக்குழுவினர் காசி பகுதிகளில் முகாமிட்டு கங்கையில் படகில் சென்று தேடி வருகிறார்கள்.
மதன் காணாமல் போய் 8 நாட்களாகியும் அவரைப்பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவர் கடிதத்தில் குறிப்பிட்டது போல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாமோ? என்ற சந்தேகம் திரையுலகினர் மத்தியில் வலுத்து இருக்கிறது. இதனால் அவரது குடும்பத்தினர் பதற்றத்தில் உள்ளனர்.
படங்கள் வினியோகம்
மதன், 2011-ல் தான் வேந்தர் மூவிஸ் பட நிறுவனத்தை தொடங்கி திரையுலகுக்கு அறிமுகமானார். முதலில் படங்களை வினியோகம் மட்டுமே செய்தார். வசந்த பாலன் இயக்கத்தில் ஆதி, பசுபதி, தன்ஷிகா நடித்த ‘அரவாண்’ படம்தான் இவர் வினியோகம் செய்த முதல் படம். அதன் பிறகு கார்த்தி நடித்த சகுனி, விஷால் நடித்த பாண்டிய நாடு, அர்ஜுன் நடித்த வனயுத்தம் ஆகிய படங்களை வாங்கி வினியோகம் செய்தார்.
விஜய் நடித்த தலைவா, அஜித்குமார் நடித்த ஆரம்பம், வீரம், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், விஷால்-சுருதிஹாசன் ஜோடியாக நடித்த பூஜை, நான் சிகப்பு மனிதன், கலகலப்பு, கும்கி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்துள்ளார்.
இதில் சில படங்கள் அவருக்கு லாபம் ஈட்டி கொடுத்தன. ஆனால் பல படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி அவரை மன உளைச்சலுக்கு தள்ளின. பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெற்றிகரமாக ஓடிய தில்லுமுல்லு படத்தை ‘ரீமேக்’ செய்து தயாரித்தார்.
பிரபாகரன் வேடம்
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து புலிப்பார்வை என்ற படத்தையும் தயாரித்தார். இந்த படத்தில் பிரபாகரன் வேடத்தில் நடிக்கவும் செய்தார்.
இது தணிக்கை குழுவினரின் கெடுபிடிகளில் சிக்கி கஷ்டப்பட்டு வெளி வந்தது. மதன் கடைசியாக தயாரித்த ‘பாயும் புலி’ படம் கடந்த வருடம் வெளியானது. லிங்கா, பாயும் புலி படங்களில் நஷ்டம் அடைந்ததாகவும் தலைவா படம் திட்டமிட்டபடி திரைக்கு வராததால் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மதன் தனது கடிதத்தில் எழுதி வைத்து இருக்கிறார்.
அத்துடன் வருமான வரித்துறையினர் சோதனையில் ரூ.6.50 கோடியை இழந்ததாகவும் கூறி இருக்கிறார். சில மாதங்களாக, தயாரிப்பு மற்றும் வினியோக பணிகளில் அவர் ஈடுபடவில்லை.
இந்த நிலையில் தான் தற்போது மாயமாகி இருக்கிறார். அவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்று உறுதியாக தெரியவில்லை.
0 comments:
Post a Comment