தேசம்நெற் மற்றும், லண்டனில் வெளிவரும் தேசம் சஞ்சிகை ஆகியவற்றின் பிரதம ஆசிரியர் த.ஜெயபாலன் எழுதிய ‘வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற நூலின் ஆய்வரங்கும், கலந்துரையாடலும் கிளிநொச்சி- திருநகரில் அமைந்துள்ள லிற்றில் எய்ட் கணனி மையத்தில் இன்று 14ம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகி 6.00 மணிவரை நடைபெற்றது.
உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. சி.கணேசலிங்கம் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. திரு.ஜெயகுமாரன் (தமிழினியின் கணவர்) எழுத்தாளர்கள் திரு.பொன் காந்தன், திரு.சி.கருணாகரன் ஆகியோர் நூலாய்வை மேற்கொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ. ஆனந்தசங்கரி கருத்துரை நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியர் திரு.ஜெயபாலன் வழங்கினார். தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றது.
ஜெயகுமாரன்
நுாலாசிரியர் ஜெயபாலன் நீண்ட காலமாக எவ்வித பக்கச் சார்புமின்றி அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வரும் ஒரு ஊடகவியலாளர். போர் நடைபெற்ற காலங்களிலும் துணிச்சலுடன் தனது விமர்சனக் கருத்துக்களை அவர் முன்வைத்தார். அதனால் அவருக்கு ஆபத்துக்கள் எற்படலாம் என்பதை நான் அவருக்கு அக்காலத்தில் எச்சரித்திருந்தேன். ஆனால், அவர் அச்சமின்றி மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து வந்தார். விமர்சனம் செய்பவர்களுக்கும் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவர்களுக்கும் துரோகி பட்டம் வழங்கும் காலகட்டத்தில் அவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காது தனது கருத்துக்களை துணிச்சலுடன் முன்வைத்தார். அவற்றை ஒரு ஆவணத் தொகுப்பாகவே இந்த நூலில் முன்வைத்துள்ளார்.
பொன்காந்தன்
நூலை நான் முழுமையாக வாசித்தேன். ஆனால், இதற்கு முழுமையானதோர் ஆய்வினை என்னால் செய்ய முடியாது. முள்ளிவாய்க்கால் பற்றி, முள்ளிவாய்க்கால் வரை பயணித்து – அந்த வலியையும் துயரங்களையும் அனுபவித்தவர்களினாலேயே எழுத முடியும். வெளியிலிருந்து அதனை பதிவு செய்ய முடியாது. நான் போர்க்காலம் முழுவதும் போர் நடைபெற்ற மண்ணிலேயே வாழ்ந்தவன். இறுதியில் முள்ளிவாய்க்கால் வரை பயணித்தவன். எனது சகோதரி விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாகவிருந்து வீரச்சாவை அடைந்தார். அதனுடாகவே போராட்டத்தையும், போரின் இழப்புக்களையும் உணர்வு பூர்வமாக அனுபவிக்க முடிகிறது.
விடுதலைப்புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இடையில் தப்பிச் செல்ல வழிகள் இருந்தும் ஒரு நம்பிக்கையினாலேயே மக்கள் இறுதிக் கட்டம் வரை பயணித்தார்கள்.
நான் அரசியலில் ஈடுபாடுடைய காரணத்தினால், நூல் குறித்த ஆய்வை வளைவு நெளிவுகளுடனேயே செய்ய வேண்டியுள்ளது. ஆனால், நூலாசிரியர் ஜெயபாலனுக்கு எவ்வித அரசியலும் தேவைப்படாது என்பதால் அவரது கருத்துக்களை எவ்வித நெளிவு சுழிவுமின்றி நேரடியாக முன்வைத்துள்ளார். இதனை நான் பாராட்டுகின்றேன்.
அரசாங்கம் வடக்கில் விகாரைகள் கட்டுவதை விடுத்து, இந்த மண்ணில் தங்களை அர்ப்பணித்த போராளிகளின் நினைவிடங்களான மாவீரர் துயிலுமில்லங்களை மீளமைத்துத் தர வேண்டும். போரை முடிவிற்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஸ மாவீர் துயிலும் இல்லங்களை அழிக்காமல் மக்கள் அஞ்சலிக்காக அவற்றை விட்டிருந்தால் இன்று அவர் தமிழ் மக்களின் மனங்களை வென்றிருப்பார்.
இன்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளும் போராட்டம் நடத்துபவர்களும் தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் துறக்க தயாரா? உண்மையில் உங்கள் அர்ப்பணிப்பினை அவ்வழியில் ஒருவராவது காட்டுங்கள்.
சி.கருணாகரன்
விமர்சனங்களுக்கும் மாற்றுக் கருத்துக்களுக்குமான வெளி அவசியமானது. ஜெயபாலனின் நூல் ஒரு அறிவியல் ஆவணம். அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, வெறெந்த அமைப்புக்களாக இருந்தாலும் சரி விமர்சனம் செய்வோருக்கும், மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோருக்கும் துரோகி பட்டமளிப்பதை ஒரு காலகட்டத்தில் தொடங்கி, அது இன்று வரையும் நீடிக்கின்றது. அதற்காக நாம் மக்கள் நன்மைக்கான விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் நிறுத்தி விட்டு ஒதங்கி விட முடியாது.
வீ.ஆனந்தசங்கரி
நான் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு கடிதங்களை எழுதினேன். அரசாங்கத்திற்கும் எழுதினேன். அதிலும், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மஹிந்த அரசாங்கத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் எழுதிய கடிதங்கள் முக்கியமானவை.
ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் பொதுமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என நான் அரசாங்கத்தை கோரினேன். விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை கைவிட்டதையடுத்து. இனிமேல் தாக்குப்பிடிக்க முடியாது என்று புரிந்து கொண்டதால் அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு சர்வதேசத்தின் முன்னிலையில் ஒரு போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப்புலிகளுடன் தொடர்பை கொண்டிருந்ததால் அவர்களுடன் பேசியும், இந்தியாவுடன் பேச்சு நடத்தியும் ஒரு நடவடிக்கை எடுக்கும் படி அவர்களிடம் கேட்டேன். மூன்று தரப்பினரும் எனது கருத்துக்களை ஏற்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அத்தருணத்தில் சரியாக செயற்பட்டிருந்தால் போரில் ஏற்பட்ட அழிவுகளையும், உயிரிழப்புக்களையும் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
நூலாசிரியர் ஜெயபாலன் ஏற்புரை-
பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளும் ஒரு கருத்துருவாக்கத்தின் பின்னால் அனைவரும் ஒரு அலையாக செல்லும் போக்கு காணப்படுகின்றது. அதனால் அவர்களால் மாற்றுக் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாமலுள்ளது. 2009ம் ஆண்டின் இறுதிக்கால கட்டத்திலேயே அதிகமான உயிழப்புக்கள் இந்த மண்ணில் ஏற்பட்டது. இக்காலகட்டத்தில் புலம்பெயர் அமைப்பினர் போரில் ஈடுபட்டவர்களின் போக்கை ஆதரிப்பவர்களாகவே செயற்பட்டார்கள்.
2009 ஏப்ரல் மாதத்தில் பிரித்தானிய வெளிவிவகார செயலர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பெர்னாட் கொச்னர் இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பதே தீர்விற்கு வழிவகுக்கும் எனவும், அல்லது பாரிய உயிரிழப்புக்கள் நேர்வதை தவிர்க்க முடியாமல் போகும் என்றும் குறிப்பிட்டனர்.
அதனை விடவும், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறப் போவதை அறிந்திருந்தனர். இந்தியா இதனை தங்களுக்கு தெரிவித்திருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.சிவாஜிலிங்கம் என்னிடம் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் ஆயுதங்களை ஒப்படைத்து மனித பேரழிவினை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறிய ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பிர் சிவாஜிலிங்கம் என்கிற வகையில் அவரில் எனக்கு எப்பொதும் மரியாதை உள்ளது.
காலத்திற்கு காலம் வெளியிடப்பட்ட தீர்வுகள் எல்லாம் நிராகரிக்கப்பட்டன. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது வரவிருந்த தீர்வை நிராகரித்தோம். பின்னர் சந்திரிகாவின் தீர்வுப் பொதியை நிராகரித்தோம். பின்னர் வந்த ஒஸ்லோ உடன்படிக்கையை நிராகரித்தோம். 2005ம் ஆண்டு எங்கள் அரசியல் முடிவினாலேயே மஹிந்த ராஜபக்ஸ வென்றார். இந்த அரசியல் முடிவுகளால் நாங்கள் கொடுத்த விலை மிக அதிகம்.
இந்த அரசியல் முடிவுகள் தவறு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் எப்போதாவது ஒப்பக்கொண்டிருக்கின்றார்களா? இப்போதும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரியான வழியில் செல்கின்றார்களா என்கிற கேள்வியும் எழுகின்றது.
இந்த தவறுகள் தொடருமாக இருந்தால் மீண்டும் ஒரு பேரவலத்தை தமிழ் சமூகம் தாங்க முடியாது. இதனடிப்படையில் தான் இந்த நூல் உருவாக்கம் பெற்றுள்ளது. இதில் விடுதலைப்புலிகள் மீதான விமர்சனம் என்பது விடுதலைப்புலிகள் போராளிகள் மீதான அவதூறு அல்ல. ஆனால் தவறுகள் விமர்சிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment