மனித உரிமை விவகாரத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முறைமையை பரந்துபட்ட ரீதியில் முன்னெடுக்கவும் இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்கும் வகையில் ஐ.நா மனித உரிமை பேரவையில் மற்றுமொரு பிரேரணை கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம்திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்போது பேரவையின் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்பான இந்தப் பிரேரணையை கொண்டுவருமென தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தையும் உதவிகளையும் பெற்றுக்கொடுத்தல் என்ற தொனிப்பொருளில் இந்த பிரேரணை முன்வைக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.
கடந்த 2012, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் இலங்கை தொடர்பான பிரேரணைகளை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டுவந்திருந்தன. ஆனால் இம்முறை அமெரிக்கா இலங்கை தொடர்பாக பிரேரணை கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபடுமா என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
அந்தவகையிலேயே மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளின் ஐரோப்பிய ஒன்றியப் பிரிவு இந்தப் பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் ஐரோப்பிய ஒன்றியத்தால் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய பிரேரணை இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்க இருப்பதன் காரணமாக அதனை இலங்கை எதிர்க்காது என்றும் தெரியவருகிறது.
இருந்தபோதிலும் இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் மற்றுமொரு பிரேரணை கொண்டுவரும் நோக்கில் இதுவரை எந்தவிதமான உத்தியோகப்பூர்வமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை.
கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையானது வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. விசேடமாக இலங்கை அரசாங்கமும் இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது.
அந்தப் பிரேரணையில் பொதுநலவாய சர்வதேச நீதிபதிகள் சட்டத்தரணிகள், வழக்குரைஞர்கள், விசாரணையாளர்களைக் கொண்டு விசாரணைப் பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜெனிவா மனித உரிமை பேரவையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.
எவ்வாறெனினும் இம்முறை 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை எவ்வாறு ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்தியது என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் எழுத்துமூல அறிக்கையை முன்வைக்கவிருக்கிறார்.
அந்த அறிக்கையில் இலங்கைக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே அந்த அறிக்கை அடிப்படையாகக் கொண்டு புதிய பிரேரணையொன்று இம்முறை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படலாம் எனத் தெரியவருகிறது.
0 comments:
Post a Comment