சின்னத்திரை சினிமா அனுபவம், மனைவி குழந்தைகள் பற்றி, நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் குறித்து... என சினிமாவுக்கு வந்தது தொடங்கி இன்று வரையான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் சாமிநாதன்.
``வீட்டுக்கு கூப்பிட்ட விஜய், ஜூனியர் நாசர், ஹீரோ வாய்ப்பு!'' - `லொள்ளு சபா' சாமிநாதன் ஷேரிங்ஸ்
விஜய் டி.வி 'லொள்ளு சபா' சாமிநாதன் என்றால் தெரியாதவர்களே கிடையாது. அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை இருந்த இருவர்களில் ஒருவர் சாமிநாதன். மற்றொருவர் எஸ்தர். பிறகு, முழுநேர நகைச்சுவை நடிகராக மாறிவிட்டார். அவரையும் அவரின் குடும்பத்தினரையும் வீட்டில் சந்தித்தேன்.
சுவாமிநாதன்
''நடிப்புதான் என் மூச்சுனு முடிவு பண்ணது, ஸ்கூல் படிக்கிறப்போதான். படிப்பை முடிச்சதும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல சேரணும்னு முடிவெடுத்தேன். என் கூடப் பிறந்தவங்க நான்கு அண்ணன், நான்கு அக்கா. நான்தான் கடைக்குட்டி. செல்லமா வளர்ந்தவனும்கூட! அடம்பிடிக்கிறானேனு சொந்த ஊரான கும்பகோணத்திலிருந்து என்னை சென்னைக்கு அனுப்பி வச்சாங்க. அங்கே இங்கேனு தங்கி அட்மிஷனுக்காக ஃபிலிம் இன்ஸ்டிடியூட் போனா பயந்துட்டேன்.
அங்கே 1,000 பேர் அட்மிஷனுக்கு வந்திருந்தாங்க. நமக்கெல்லாம் எங்கே சீட் கிடைக்கப்போகுதுனு ஒரு பக்கம் மனசு படபடனு அடிச்சுக்கிது. வந்தது வந்துட்டோம்; எப்படியும் சேர்ந்துடணும்டானு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கிட்டு வெயிட் பண்ணேன். என் பெயரைச் சொல்லி கூப்பிட, தயக்கத்தோடு உள்ளே போனேன். அங்கே நடிகை பானுமதி, புட்டண்ணா, அரசுபாபு, ராமன்னா... இவங்கதான் செலக்ஷன் ஆள்களா உட்கார்ந்திருந்தாங்க. நான் அவங்ககிட்ட சிவாஜி பேசிய வசனத்தைப் பேசிக்காட்டினேன். 'யாரையும் இமிடேட் பண்ணாம, நீயாக ஒரு கதாபாத்திரத்தை யோசிச்சுப் பேசு'னு சொன்னாங்க. நானும் அப்படிப் பேசிக்காட்டினேன். கைதட்டினாங்க. பிறகு, ஒருவழியா எனக்கு அட்மிஷன் கிடைச்சது. பானுமதி அம்மாதான் எனக்கு விசிட்டிங் புரொபஸர்.
நடிகர் சாமிநாதன்
1978 - 80 வரை... ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்ச சர்டிபிகேட் கோர்ஸ்தான், என்னைப் பிற்காலத்தில் நடிகனாக்கியது. ‘நான் சிகப்பு மனிதன்’தான் நான் நடித்த முதல் படம். என்னுடைய 24 வயதில் தொடங்கிய சினிமா பயணம் இப்போவரை எந்த இடைவேளையும் இல்லாம தொடருது. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்" என்பவர், மேலே பார்த்துக் கும்பிட்டுக்கொள்கிறார்.
'' 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் ரஜினி வாத்தியார், நான் மாணவன். இந்தப் பட வாய்ப்பு வந்தப்போ, வடபழனி ஆபீஸூக்கு வரச் சொல்லியிருந்தாங்க. நடந்தே போய்தான் வாய்ப்பு கேட்பேன். கையில் வருமானம் இல்லை. என்ன செய்ய, யாராவது ஒருவர் அறிமுகமானா, அவர்கிட்ட வாய்ப்பு கேட்டு நாயாக அலைந்த காலம் அது. 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருந்தவங்க எல்லாம் படக்குழுவினருக்குத் தெரிந்தவர்களா இருந்தாங்க. முன் வரிசையில உட்கார்ந்திருந்த என்னை ஒவ்வொருவராகப் பின்னுக்குத் தள்ளி கடைசி வரிசைக்கே அனுப்பிட்டாங்க. ஆனா, எனக்கு முன்னாடி போன ஒவ்வொருவரும் ரிஜெக்ட் ஆகித் திரும்பி வர, நான் உள்ளே போனேன். இயக்குநர் எஸ்.ஏ.சி சார் ஒரு வசனம் கொடுத்துப் பேசச் சொன்னார். நல்லபடியா பேசினேன். செலக்ட் ஆனேன். பிறகு, படிப்படியா பல படங்கள்ல தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சேன்" என்பவருக்கு, நடிகர் நாசர் ஜூனியராம்!
0 comments:
Post a Comment