சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகை சந்தோஷி, தற்போது நடிப்பிலிருந்து சிறிய பிரேக் எடுத்திருக்கிறார். தனக்கு நடந்த சர்ப்ரைஸ் வளைகாப்பு மற்றும் தன் பிசினஸ் பயணம் குறித்து உற்சாகமாகப் பேசுகிறார் சந்தோஷி.
``உங்க சின்னத்திரை ஃப்ரெண்ட்ஸ் வளைகாப்பு நடத்தி சர்ப்ரைஸ் கொடுத்திருக்காங்க. எப்படி ஃபீல் பண்ணீங்க?"
``என் முதல் குழந்தை ஒன்றாம் வகுப்பு போகப்போறாங்க. மீண்டும் கர்ப்பமா இருக்கேன். இப்போ 5 வது மாதம். என் ஃப்ரெண்ட்ஸ் என்னைப் பார்க்க வருகிறோம்னு சொன்னாங்க. நேற்று முன்தினம் நாலு ஃப்ரெண்ட்ஸ் வந்திருந்தாங்க. எனக்கு சர்ப்ரைஸா வளைகாப்பு நடத்தினாங்க. ரொம்பச் சந்தோஷமாகிட்டேன். இந்த சர்ப்ரைஸ் பிளானில், என் கணவரின் பங்கும் இருக்கு. அவரும் என்கிட்ட எதுவும் சொல்லலை. கூடிய சீக்கிரம் என் குடும்பத்தாரும் வளைகாப்பு நடத்தப்போறாங்க. ஆக, எனக்கு ரெண்டு முறை வளைகாப்பு. நான் ரொம்ப லக்கி."
``நடிப்பிலிருந்து பிரேக் எடுத்திருக்கீங்க. என்ன காரணம்?"
``சன் டிவி `மரகதவீணை' சீரியலுக்குப் பிறகு, ரெண்டு வருஷமா நடிக்காம இருக்கேன். எங்க பிசினஸ் வேலைகளுக்கே நேரம் சரியா இருக்கு. முன்பு ஒரேநேரத்தில் 5 சீரியல்கள்ல நடிச்சிருக்கேன். இப்போ அப்படியான நல்ல கதைகள் வருவதில்லை. இப்போ டெலிவரி ஆகப்போறதால, ஒரு வருஷத்துக்கு நடிக்க முடியாது. அதுக்குப் பிறகு நல்ல கதைகள் வந்தால், நிச்சயம் நடிப்பேன். நடிப்புத்துறையில நிரந்தரமா வேலை இருக்காது. அதனால பிசினஸை பார்த்துகிட்டே, நடிக்கிறதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நான் நடிப்பிலிருந்து நிரந்தரமான பிரேக் எடுக்கலை."
``சினிமாவில் புகழ் பெறணும்னு ஆசைப்பட்டிருக்கீங்களா?"
``இதுவரை நானா எந்த வாய்ப்பும் கேட்டுப் போனதில்லை. என்னைத் தேடி வந்த வாய்ப்புகளில், பிடிச்ச கதைகளில்தான் நடிச்சேன். ஒருகட்டத்துல ஒரே நேரத்துல நாலு மொழிகள்லயும் பல சீரியல்கள்ல நடிச்சேன். இதுக்கிடையே ஹீரோயினாவும் கேரக்டர் ரோல்கள்லயும் சில திரைப்படங்கள்லயும் நடிச்சேன். அப்படித் தங்கை ரோல்ல சந்தோஷமா நடிச்சேன். என்கிட்ட டைரக்டர் கதை சொல்ல வரும்போதே கிளாமரா நடிக்க மாட்டேன்; பாலியல் வன்கொடுமை மற்றும் முத்தக் காட்சியில நடிக்க மாட்டேன்னு உறுதியா சொல்லிடுவேன். அதனால், நிறைய சினிமா வாய்ப்புகளைத் தவிர்த்தேன். அதனால சினிமாவில் பிரபலமாக முடியலையேனு எனக்குக் கொஞ்சம்கூட வருத்தமில்லை. அதேசமயம், சீரியல்கள்ல நல்ல ரோல்கள் கிடைச்சுது. அதனால, பல வருஷமா சீரியல்கள்ல நடிச்சேன்."
``உங்க பிசினஸ் எப்படிப் போகுது?"
``நடிகை ராதிகா மேடம் தயாரிப்பில் பல சீரியல்கள்ல நடிச்சிருக்கேன். அவங்க என்னுடைய பெரிய இன்ஸ்பிரேஷன். அவங்களோட `இளவரசி' சீரியல்ல ஆறரை வருஷம் நடிச்சேன். பிறகு புதுசா ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. எனக்கு ஃபேஷன் டிசைனிங் வேலைகள்லதான் அதிக ஆர்வம். அதுலயே புதுசா தொழில் தொடங்கலாம்னு நினைச்சேன். அப்படித்தான், நாலு வருஷத்துக்கு முன்பு, நானும் என் கணவரும் சேர்ந்து `PLUSH Boutique & Beauty Lounge' கடையை சென்னையில் தொடங்கினோம். ராதிகா மேடம்தான் முதல் ஷோரூமை திறந்துவெச்சு வாழ்த்தினாங்க. இப்போ மொத்தம் ரெண்டு கிளைகள் இருக்கு. இது மணமகளுக்கான ஆடைகள், மேக்கப், ஆபரணங்கள்னு எல்லாமே கிடைக்கிற பிரத்யேக ஷோரூம். வெடிங் போட்டோகிராபியும் பண்றோம். மணமகனுக்கு சலூன் வசதி மட்டும் கிடையாது. இப்போ மதுரை மற்றும் விஜயவாடாவில் புது கிளைகளைத் தொடங்க இருக்கிறோம். வெளிநாடுகளிலிருந்து பலரும் என்கிட்ட பயிற்சிக்கு வர்றாங்க. நான்தான் சொல்லிக்கொடுக்கிறேன். சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு."
0 comments:
Post a Comment