டர்னர்
அதிரடிக்குப் பெயர் போன ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது ப்ளே- ஆப் சுற்றுகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஏறக்குறைய எல்லா அணிகளும் 10 போட்டிகளில் விளையாடிவிட்டது. ப்ளே ஆப்க்கு தகுதி பெறும் அணிகள் எது என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டோ இப்படி நகர்ந்துகொண்டிருக்க இந்த தொடரில் தற்போது தான் தனது ரன் கணக்கையே தொடங்கியுள்ளார்.
ஒரு அதிரடி ஆட்டக்காரர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டர்னரை ஐபிஎல் தொடரில் 50 லட்சம் கொடுத்து எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இக்கட்டான சூழலில் அணிக்கு டர்னிங் பாய்ண்டாக இருப்பார் இந்த டர்னர் என நம்பி எடுத்தது ஆர்.ஆர் அணி. ஆனால் இங்கு நடந்ததோ வேறு. களமிறங்கிய முதல் மூன்று போட்டிகளிலும் தான் சந்தித்த முதல் பந்திலே டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். கோல்டன் டக்- அவுட்களில் ஹாட்ரிக் சாதனைப் படைத்தார். ரசிகர்கள் அவரைக் கலாய்த்து தள்ள ஆரம்பித்தனர். இருப்பினும் ராஜஸ்தான் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியது டர்னருக்கு.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 45-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்தப்போட்டியில் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார் டர்னர். முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ரஹானே- லிவ்விங் ஸ்டோன் நல்ல தொடக்கம் ஏற்படுத்திக்கொடுத்தனர். ராஜஸ்தான் அணி வெற்றியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மித் 17-வது ஓவரின் கடைசி பந்தில் அவுட்டானார்.
ஸ்மித்
ராஜஸ்தான் வெற்றிக்குப் 18 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீச தயாரானார். டர்னர் மைதானத்திற்குள் களம் புகுந்தார். மைதானமே ஆவலுடன் காத்திருந்தது. இந்தப்போட்டியிலாவது டர்னர் ரன் அடிப்பாரா என்று. புவனேஸ்வர் குமார் வீசிய முதல் பந்தை லெக் சைடில் தட்டிவிட்டு ஒரு ரன் ஓடினார் டர்னர். அவர் ரன் அடித்ததது தான் தாமதம் பவுண்டரி லைனில் இருந்த சகவீரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். டர்னருக்கு சிரிப்பு வந்துவிட்டது. சிரிக்காமல் ஓடி ஒரு ரன் எடுத்துவிட்டார். புவனேஷ்வர்குமாரும் புன்னகைத்துவிட்டுச் சென்றார்.
புவனேஷ்வர்குமார்
ஒரு வழியாகத் தனது 4-வது போட்டியில் ரன் கணக்கை தொடங்கினார் டர்னர். 19.1 ஒவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 7 பந்துகளைச் சந்தித்த டர்னர் விக்கெட் இழக்காமல் 3 ரன்களை சேர்த்தார். டர்னருக்கு இணையத்தில் வாழ்த்து மழை குவிந்து வருகிறது.
முன்னதாக இதே டர்னர் தான் இந்தாண்டு மார்ச் மாதம் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான 4வது ஒரு நாள் போட்டியில் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 84 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டர்னரின் அதிரடியால் இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment