எதிர்வரும் நாட்களில் கிழக்கு மாகாணத்திலுள்ள இந்து ஆலயங்களில் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அவை தொடர்பாக கிழக்கு மாகாண இந்து ஆலயங்களின் பரிபாலன சபைகள் கவனம் செலுத்தியுள்ளன.
தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்புத் தொடர்பில் ஆலயங்களின் நிர்வாக சபையினர் முற்கூட்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதனைத் தொடர்ந்தே, இந்து ஆலயங்களின் வருடாந்த உற்சவங்கள் தொடர்பாக, ஆலயங்களின் பரிபாலன சபைகள் கவனம் செலுத்தியுள்ளன.
ஆலயங்களில் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகும் நிலையில், அவற்றில் கலந்துகொள்ளும் பக்தர்களை மிக அவதானத்துடன் நடக்குமாறும், கிழக்கு மாகாண இந்து ஆலயங்களின் பரிபாலன சபைகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அத்தோடு, ஆலய உற்சவ காலங்களில் நடத்தப்பட்டு வந்த இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலை, கலாசார நிகழ்ச்சிகளையும் தவிர்க்குமாறும், கிழக்கு மாகாண இந்து ஆலயங்களின் பரிபாலன சபைகளிடம், இந்துசமய அமைப்புக்கள் கோரியுள்ளன.
மேலும், ஆலய உற்சவங்களை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக கிழக்கு மாகாண ஆலயங்களின் நிர்வாக சபையினர் விசேட கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆலய உற்சவக் காலங்களில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பிரதேச பொலிஸ் நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பை பெறவும் ஆலயங்களின் நிர்வாக சபையினர் தீர்மானித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான இந்து ஆலயங்களின் வருடாந்த உற்சவங்கள்; குறிப்பாக, கண்ணகி அம்மன் ஆலய வைகாசி திருச்சடங்கு உற்சவம் எதிர்வரும் மே 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாமாங்கேஸ்வரர் ஆலயம், களுதாவளைப் பிள்ளையார் ஆலயம், வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம், சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், மண்டூர் கந்தசுவாமி ஆலயம், தாந்தாமலை முருகன் ஆலயம், திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி ஆலயம், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம், உகந்தை மலை முருகன் ஆலயம், கண்ணகி அம்மன், காளி அம்மன், மாரியம்மன் உள்ளிட்ட பல ஆலயங்களின் உற்சவங்கள் எதிர்வரும் மாதங்களில் ஆரம்பமாகவுள்ளன.
அத்தோடு, கதிர்காமத்திற்கான பாத யாத்திரையும் நடைபெறவுள்ளது.
0 comments:
Post a Comment